ஏற்றுமதி கடும் சரிவு தங்கம் இறக்குமதி 54 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 54 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாத ஏற்றுமதி இறக்குமதி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இன்ஜினியரிங் பொருட்கள், நவரத்தினங்கள், நகைகள், தோல் பொருட்கள், காபி, அரிசி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பல முக்கிய பொருட்களின் ஏற்றுமதி  சரிந்ததால், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி 0.64 சதவீதம் குறைந்துள்ளது. இது 4 மாதங்களில் இல்லாத கடும் சரிவாகும்.

 மொத்த ஏற்றுமதி மதிப்பு 2,600 கோடி டாலர். ஆனால் இறக்குமதி 4,140 கோடி டாலராக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 1,533 கோடி டாலர் ஆகியுள்ளது. இறக்குமதி அதிகரிப்புக்கு தங்கம், கச்சா எண்ணெய் இறக்குமதி உயர்வே  காரணம். தங்கம் இறக்குமதி 54 சதவீதம் உயர்ந்து 397 கோடி டாலராகவும், எண்ணெய் பொருட்கள் இறக்குமதி 9.26 சதவீதம் உயர்ந்து 1,138 கோடி டாலராகவும் உள்ளது. எண்ணெய் சாராத பொருட்களின் இறக்குமதி 2.78 சதவீதம் அதிகரித்துள்ளது.  தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகளின் உற்பத்தி சரிவு, சர்வதேச சந்தைகளில் வர்த்தகப்போர் காரணமாக ஏற்றுமதி சரிந்துள்ளது.

Related Stories: