மதுரை மக்களவை தேர்தல் ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி,மே.16: ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு அதிகப்படியான பணப்பட்டுவாட கொடுக்கப்பட்டுள்ளதால் நடந்து முடிந்த மதுரை மக்களவை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மதுரை கேகே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை கடந்த 8ம் தேதி தாக்கல் செய்திருந்தார்.

அதில்,”தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஓட்டுப்போட வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிகம் நடைபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை தொகுதியின் அதிமுக வேட்பாளரான ராஜ் சத்யன் சுமார் ரூ.70கோடிக்கு மேல் தேர்தல் செலவை செய்துள்ளார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது. அதனால் நடந்து முடிந்த மதுரை மக்களவை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததோடு பட்டியலிட்டு பின்னர் விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்தது. வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில் மதுரை மக்களவை தேர்தலை அதிகப்படியான பணப்பட்டுவாடா செய்த காரணத்தினால் ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பட்டியலிட்டு விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது வரை நிலுவையில் உள்ளது என நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,”மனுதாரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதில் மதுரை மக்களவை தேர்தல் குறித்த மனுவை பட்டியலிட்டு வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே 17ம் தேதி நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என நேற்று உத்தரவிட்டனர்.

× RELATED குஜராத் மாநிலங்களவை தேர்தல் சர்ச்சை :...