விஜய் மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை விவரத்தை வழங்க முடியாது: ஆர்டிஐ மனுவுக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: வங்கி கடன் மோசடி வழக்கில் நாட்டை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி மீதான நாடு கடத்தல் நடவடிக்கை பற்றிய  விவரங்களை தகவல் உரிமை சட்டத்தில் தெரிவிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரி நீரவ் மோடி ஆகியோர் நாட்டை விட்டு தப்பியோடி விட்டனர். லண்டனில் பதுங்கியுள்ள இவர்களை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் ஜூலை 2ம் தேதி லண்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோல், நீரவ் மோடியை நாடு கடத்தி கொண்டு வரவும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.

இவர் கடந்த மார்ச்சில் லண்டன் போலீசால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் 3 முறை ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவரையும் எப்போது இந்தியா அழைத்து வரப்படுவார்கள், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்ற விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பத்திரிகையாளர் ஒருவர் விண்ணப்பித்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள வெளியுறவு அமைச்சகம், தற்போது இந்த விவகாரம் பிரிட்டன் அரசின் பரிசீலனையில் உள்ளது. இது குறித்த விவரங்களின் நகல்களை, தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு 8 (1) (h)ன் கீழ் வழங்கக் கூடாது. அது விசாரணையையோ அல்லது கைது செய்வதையோ அல்லது தண்டனை வழங்குவதையோ தாமதப்படுத்தக் கூடும்’ என்று தெரிவித்துள்ளது.


× RELATED போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்