4 தொகுதி இடைத்தேர்தல் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது

சென்னை, மே 16: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 9ம் தேதி அறிவித்தது.

Advertising
Advertising

இந்த 4 தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி, சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேர் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த 4 தொகுதிகளிலும் வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த 4 தொகுதியுடன், தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு 19ம் தேதி நடைபெறுகிறது. அங்கும் நாளை மாலை 6 மணிக்கு மேல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: