தேர்தல் பிரசாரத்தில் பேசிய விவகாரம் நடிகர் கமல் மீது குவியும் புகார்கள்: இந்து அமைப்புகள் கமிஷனர் அலுவலகத்தில் அளித்தனர்

சென்னை, மே 16: இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய நடிகர் கமல் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல் பிரசாரம் செய்தார். அப்போது, ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’’ என்று தெரிவித்தார். இதற்கு பாஜ மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் நடிகர் கமல் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி நடிகர் கமல் மீது ஐபிசி 153(ஏ) 295(ஏ) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், ெசன்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பாஜ மாநில இளைஞரணி துணை தலைவர் குமார், நடிகர் கமல் மீது புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் சிவக்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் கமல் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய நடிகர் கமல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத ரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து இந்துக்கள் குறித்து பேசி வரும் கமல்மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா என்பவர் நடிகர் கமல் மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘சினிமாவில் வெற்றி பெறுவதற்கு சாதி, மத ரீதியாக கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வணிக ரீதியில் வெற்றி பெற்ற நடிகர் கமல், அதே பாணியில் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் மத ரீதியான அரசியல் உள்நோக்க விஷ கருத்துக்களை தூவி தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்துள்ளார். எனவே நடிகர் கமலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் கமல் மீது இந்து அமைப்புகள் அடுத்தடுத்து புகார்கள் அளித்து வருவது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் நடத்தப்படும்

காஞ்சி மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் சதிஷ், பொதுச் செயலாளர் பிரவீன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் நேற்று காலை, கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தனிடம் புகார் செய்தனர். மேலும் மாலைக்குள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு போராட்டம், உருவ பொம்மை எரிப்பு நடத்தப்படும் என்றனர்.

Related Stories: