பொய் பேசுவதில் பிரதமர் மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது: ஸ்டாலின் சாடல்

மதுரை: பொய் பேசுவதில் பிரதமர் மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை விரகனூரில் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பிரதமராவதற்கு முன்பும் பொய் சொன்ன மோடி பிரதமரான பிறகும் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி அளித்த வாக்குறுதியும் பொய், ஒவ்வொருவரது வாங்கிக்கணக்கிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தலா ரூ.15 லட்சம் போடுவோம் என கூறியதும் பொய் தான். பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது.

1987-ல் டிஜிட்டல் கேமராவில் அத்வானியை புகைப்படம் எடுத்து இமெயில் அனுப்பியதாக மோடி கூறியிருக்கிறார். 1990-ல் தான் டிஜிட்டல் கேமராவே உலகத்தில் புழக்கத்துக்கு வந்தது என்பதால் மோடி கூறியது அப்பட்டமான பொய் என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் தோல்வி பயத்தால் தமிழிசை பொய் பேசத் தொடங்கிவிட்டார். எடப்பாடி ஆட்சிக்கு முடிவுகட்ட திமுக வேட்பாளர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.


× RELATED பெட்ரோல் பங்கை ஆட்டோ டிரைவர்கள்...