கோட்சேவை இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம்: கோட்சேவை இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த இரு நாட்களாக, கோட்சேவை இந்து தீவிரவாதி என கூறியதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தனது தேர்தல் பிரசாரத்தினை நிறுத்தி வைத்திருந்த கமல், மதுரையின் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: கூடி வாழ்ந்தால் தான் நன்மை என ஒவ்வொரு படங்களிலும் கூறி வருகிறேன்.  எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை.  உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை. தீவிரவாதத்திற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  தீவிர அரசியலில் இறங்கியதால், தீவிரமாக தான் நான் பேசுவேன் என அவர் கூறினார்.

முன்னதாக கடந்த ஞாயிறன்று  அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கமலின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தன. மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல் மீது  13க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு எதிராக அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார். இவ்விவகாரம் பேசுபொருளாக மாறியதால் கடந்த 2 நாட்களாக கமல் பிரச்சாரத்தை நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

× RELATED அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான லஞ்ச...