பாஜகவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க விடைகொடுத்தார் : சத்ருகன் சின்கா தகவல்

புதுடெல்லி : பாஜகவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க எனக்கு விடை கொடுத்தார் என்று சத்ருகன் சின்கா கூறியுள்ளார். சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றினேன் என்றும், வாஜ்பாயின் பேச்சைக்கேட்டு மனதை பறிகொடுத்து பாஜகவில் சேர்ந்ததாகவும் கூறினார். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது, ஆனால் தற்போது தனிநபர் ஆதிக்கம் வந்துவிட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தனிநபர் ஆதிக்கம் அதிகரித்ததால் மட்டுமே பாஜகவில் இருந்து விலக முடிவு செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக அத்வானியை சந்தித்து ஆசி பெற்ற போது அவர் எனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார் என்றும், அதேசமயம் பாஜவில் இருந்து விலக வேண்டாம் என்று அவர் என்னை தடுக்கவில்லை, அதற்கு பதில் அவர் எனது அன்பு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்தார் என சத்ருகன் சின்கா கூறியுள்ளார். பாஜவினர் அத்வானியை மிகவும் அவமரியாதை செய்தார்கள், அதை தட்டிக்கேட்டதால் என்னை பணிய வைக்க முயற்சி செய்தனர் என அவர் தகவல் அளித்துள்ளார்.

மேலும் அதற்கு நான் பணியவில்லை என்பதால் கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதிக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று மோடி அதிக நம்பிக்கையில் இருக்கிறார் என்றும், வரும் 23ம் தேதி அவருக்கு உண்மை தெரிந்து விடும் என்றும் சத்ருகன் சின்கா கூறியுள்ளார். இரும்புப் பெண்மணியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எனது நண்பர்களில் ஒருவர், அவர் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


× RELATED கண்ணீரால் இணைந்த நட்பு!