உலக கோப்பை சவாலுக்கு இந்தியா முழுவீச்சில் தயார்...: பயிற்சியாளர் சாஸ்திரி உற்சாகம்

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டி சவாலை எதிர்கொள்ள இந்திய அணி முழுவீச்சில் தயாராக உள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் மும்முரமாகத்  தயாராகி வருகின்றன. ஐபிஎல் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்களும் உலக கோப்பை தொடரில் கவனத்தை திருப்பி உள்ளனர்.இது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டெல்லியில் நேற்று கூறியதாவது: உலக கோப்பையில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்திய அணி எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு  முழுவீச்சில் தயாராக உள்ளது. பேட்டிங் வரிசையில் 4வது வீரராகக் களமிறங்குவது யார் என்பது பற்றி கவலைப்படவில்லை. அந்த இடத்தில் விளையாட நிறைய வீரர்கள் உள்ளனர். எத்தகைய சூழலுக்கும் ஏற்ப விளையாடும் திறமை வாய்ந்த  அணியாக இந்தியா உள்ளது. தேவைக்கு ஏற்ப சரியான வீரர்களை களமிறக்குவோம்.

Advertising
Advertising

வெற்றிக்குத் தேவையான அனைத்து அடிப்படையான அம்சங்களும் எங்களிடம் உள்ளன. வேகப் பந்துவீச்சாளர்கள் யாராவது காயம் அடைந்தாலும் மாற்று வீரர்கள் தயாராக உள்ளனர். வரும் 22ம் தேதி இங்கிலாந்து புறப்படும்போது முழு  உடல்தகுதியுடன் உள்ள 15 வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எலும்புமுறிவு  எதுவும் ஏற்படவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். நிறைய அவகாசம் உள்ளதால் பிரச்னை ஏதுமில்லை. உலக கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்கூட்டியே திட்டமிடுவது என்பது சரியாக இருக்காது. சொல்லப்போனால் கடந்த 4 ஆண்டுகளுமே இதற்காகத் தயாராகும் காலம் தான். தொடரின் போக்குக்கு ஏற்ப அவ்வப்போது வியூகங்களை  மாற்றிக் கொண்டு வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் பலம் வாய்ந்தவையாக உருவெடுத்துள்ளன.

கிறிஸ் கேல், ஆந்த்ரே ரஸ்ஸல் இடம் பெற்றிருப்பதால் வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அதிரடி ஆட்டம் என்று வரும்போது அவர்களுக்கு இணையாக வேறு யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவையும் அலட்சியப்படுத்த முடியாது. கடந்த 25 ஆண்டுகளில் அந்த அணி மற்ற எந்த அணியையும் விட அதிக முறை உலக கோப்பையை வென்றுள்ளது. பலவீனமான ஆஸ்திரேலிய அணி என்று எதுவுமே  கிடையாது. முக்கிய வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பியுள்ளதால், நல்ல பார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனாலும், உலக கோப்பை என்று வரும்போது குறிப்பிட்ட நாளில் சிறப்பாக விளையாடும் அணியே வெற்றியை  வசப்படுத்தும்.இவ்வாறு சாஸ்திரி கூறியுள்ளார்.

Related Stories: