ஸ்பானிஷ் கிராண்ட் பிரீ பட்டம் வென்று ஹாமில்டன் அசத்தல்

பார்சிலோனா: ஸ்பெயினில் நடந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமிடன் சாம்பியன் பட்டம் வென்றார். பார்சிலோனா சர்க்யூட் பந்தயக் களத்தில் நடந்த போட்டியில், ஹாமில்டன் 1 மணி, 33 நிமிடம், 50.443 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 26 புள்ளிகள் கிடைத்தன. சக மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் (+4.074 விநாடி) 2வது இடம் பிடித்து 18 புள்ளிகளை தட்டிச் சென்றார்.

ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், பெராரி வீரர்கள் செபாஸ்டியன் வெட்டல், சார்லஸ் லெக்லர்க் அடுத்த இடங்களைப் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை நடந்துள்ள 5 பந்தயங்களின் முடிவில், ஹாமில்டன் 112 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். போட்டாஸ் (105), வெர்ஸ்டாப்பன் (66), வெட்டல் (64) அடுத்த இடங்களில் உள்ளனர்.

6வது பந்தயமாக மொனாகோ கிராண்ட் பிரீ வரும் 23ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை (2008, 2014, 2015, 2017, 2018) வென்றுள்ள ஹாமில்டன், நடப்பு சீசனிலும் உலக சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Stories: