பகார் ஸமான் சதம் வீண்: இங்கிலாந்துடன் 2வது ஒருநாள் போட்டி போராடி தோற்றது பாகிஸ்தான்

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 374 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான்  அணி 12 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது. பேர்ஸ்டோ 51, ஜேசன் ராய் 87, ஜோ ரூட் 40, கேப்டன் இயான் மோர்கன் 71* ரன், ஜோஸ் பட்லர் 110* ரன் விளாசினர்.

Advertising
Advertising

அடுத்து 50 ஓவரில் 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஸமான், பாபர் ஆஸம், ஆசிப் அலி ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர். எனினும், அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 361 ரன் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பகார் ஸமான் அதிகபட்சமாக 138 ரன் (106 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். பாபர் ஆஸம் 51 ரன் (52 பந்து, 1 பவுண்டரி), ஆசிப் அலி 51 ரன் (36 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), இமாம் உல் ஹக் 35, ஹரிஸ் சோகைல் 14 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் இமத் வாசிம் 8, பாஹீம் அஷ்ரப் 3 ரன்னில் வெளியேறினர்.

கேப்டன் சர்பராஸ் அகமது 41 ரன் (32 பந்து, 2 பவுண்டரி), ஹசன் அலி 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் வில்லி, பிளங்கெட் தலா 2, வோக்ஸ், மொயீன் அலி, ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க (முதல் போட்டி ரத்து), 3வது போட்டி பிரிஸ்டலில் நாளை நடைபெறுகிறது.

Related Stories: