ஜபிஎல் ஃபைனல்: பொல்லார்ட் விளாசல்; சென்னை அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ் அணி

ஹைதராபாத் : ஜபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய  மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை குவித்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

 

மும்பை அணி சார்பில் டி காக் 17 பந்துகளில் 29 ரன்களும், ரோகித் சர்மா 14 பந்துகளில் 15 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 17 பந்துகளில் 15 ரன்களும்,  கிஷான் 26 பந்துகளில் 23 ரன்களும், குர்னால் பாண்டியா 07 பந்துகளில் 07 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 16 ரன்களும், பொல்லார்ட் 25  பந்துகளில் 41 ரன்களும் குவித்தனர். சென்னை சார்பில் தீபக் சாகர் 3 விக்கெட்களையும், தாகூர், தாகிர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.  ஸ்பின் பவுலர் இம்ரான் தாஹிர் இத்தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் 1-ம் இடத்தை பிடித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த 12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று கிளைமாக்சை எட்டியது. 8 அணிகள் பங்கேற்ற  இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர்  கிங்ஸ் அணியும் தகுதி பெற்றுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த 3 போட்டிகளிலும் மும்பை அணியே  வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் ஐபிஎல்லில் 27 முறை மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 16 போட்டிகளிலும், சென்னை அணி  11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இதுவரை 3 முறை ஐபிஎல் பைனல்களில் மோதியுள்ளன.

அவற்றில் 2 போட்டிகளில் மும்பை வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 8வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில்  சற்று தட்டுத் தடுமாறியே சென்னை அணி பைனலுக்கு வந்துள்ளது. மொத்தத்தில் அனுபவம் வாய்ந்த சராசரியாக 35 வயது வீரர்களை கொண்ட டோனி  தலைமையிலான சென்னை அணியும், துடிப்பான இளம் வீரர்களை கொண்ட ரோஹிர் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதும் இந்த  இறுதிப்போட்டி, 4 முறையாக மகுடம் சூட போவது யார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: