மாட்டுத்தாவணியில் தனி பஸ்ஸ்டாண்ட் நோக்கம் சிதைகிறது ஆம்னி பஸ்கள் நகருக்குள் நுழைய மீண்டும் தடை வருமா?

*  4 ஆண்டாக தொடரும் விபத்தில் உயிர்பலி அதிகரிப்பு

*  கூடுதல் கட்டணம் வசூலித்துகொண்டு பயணிகள் அலைக்கழிப்பு

மதுரை : மாட்டுத்தாவணியில் தனியாக ஆம்னி பஸ்ஸ்டாண்ட் அமைந்த நோக்கம் சிதையும் வகையில் நகருக்குள் ஆம்னி பஸ்கள் நுழைவதால் 4 ஆண்டுகளாக தொடரும் விபத்தில் உயர்பலிகள் அதிகரிக்கின்றன, கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொண்டு பயணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர், இதனால் மீண்டும் ஆம்னி பஸ்கள் நகருக்குள் நுழைய தடை வருமா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மதுரை நகரின் மைய பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்குடன் 1999ல் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட்டும், ரிங்ரோடும் திறக்கப்பட்டது. இதன் பிறகு வெளியூர் பஸ்கள் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதியை சுற்றிலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டதால் நெருக்கடி தீராமல் இருந்தது.

ஆம்னி பஸ் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதற்கு தீர்வு காணும் நோக்குடன் மாட்டுத்தாவணியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட ஆம்னி பஸ்ஸ்டாண்ட் உருவாக்கி 2013ல் திறக்கப்பட்டது. இங்கு ஆம்னி பஸ்கள் இயக்க தனித்தனியாக புக்கிங் அலுவலகம், பஸ்கள் நிற்க தனியிடம், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன் பிறகு மதுரை நகரில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களோ, தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களோ மதுரை நகரின் மைய பகுதிக்குள் நுழையக் கூடாது என மதுரை மாவட்ட கலெக்டர் தடை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மதுரையில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்கள் மாட்டுத்தாவணி ஸ்டாண்டில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும், இங்கிருந்து சென்னை செல்லும் பஸ்கள் நேரடியாக செல்ல வேண்டும், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் ரிங்ரோடு வழியாக தான் சென்று திரும்ப வேண்டும், பெங்களூரு பஸ்கள் மாட்டுத்தாவணியில் இருந்து கே.கே.நகர். அண்ணா பஸ்ஸ்டாண்ட், பனகல்ரோடு, செல்லூர், பாத்திமா கல்லூரி வழியாக சென்று திரும்ப வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டது.

இதை எதிர்த்து 2015ல் ஆம்னி பஸ் உரிமையாளர் நீதிமன்றத்தை நாடி, “இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை நகருக்குள் நுழையலாம்” என்ற நிபந்தனையுடன் இடைக்கால தடை ஆணை பெற்றனர். இதை பயன்படுத்தி 4 ஆண்டுகளாக ஏராளமான ஆம்னி பஸ்கள் மதுரை நகரின் மைய பகுதிக்குள் நுழைந்து செல்கின்றன. ஆம்னி பஸ்ஸ்டாண்டை புறக்கணிக்கும் பல ஆம்னி பஸ்கள் ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயிலில் இருந்தும், எல்லிஸ்நகர் பகுதியில் இருந்தும் புறப்பட்டு செல்கின்றன. பெங்களூரில் இருந்து வரும் பயணிகளை அதிகாலையில் அங்கேயே இறக்கி விடுகிறார்கள். பெங்களூரு செல்லும் தென் மாவட்ட பஸ்கள் பெரும்பாலும் ரிங்ரோடு வழியாக ஆம்னி பஸ்ஸ்டாண்ட் வராமல் பெரியார் பஸ்ஸ்டாண்ட் சுற்றுப்பகுதிக்குள் நுழைகின்றன.

இதனால் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தும் அந்த பஸ் எங்கிருந்து புறப்படும், இறங்கும் இடம் எது? என அறிய முடியாமல் குடும்பத்துடன் பயணிக்கும் பயணிகள் திண்டாடுகிறார்கள். ஆம்னி பஸ்ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டதின் நோக்கமே சிதைகிறது. இந்த பஸ்கள் நகருக்குள் நுழைவதாலும், அதை தேடி பயணிகள் நகருக்குள் வர வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாலும் நெருக்கடி அதிகரிக்கிறது. பயணிகளுடன் சரக்கு லாரி போல் பல பஸ்கள் பொருட்களை ஏற்றி இறக்குகிறார்கள்.

இதற்கு ஏற்றார்போல் நேரத்தை சரிக்கட்டும் நோக்குடன் நகருக்குள் மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓட்டுகிறார்கள். இதன் விளைவு 4 ஆண்டுகளாக விபத்து அன்றாடம் தொடருகிறது. இதில் உயிர்பலி, உடல் உறுப்பு இழப்புகள் அதிகரித்து கொண்டே போகின்றன. இதன் உச்சகட்டம்தான் 3 நாட்களுக்கு முன் சுப்பிரமணியபுரம் பாலம் அருகே ஆம்னி பஸ் மோதி பெண் போலீஸ் உள்பட 4 பேர் உயிர்பலியானது.

இந்த துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நகருக்குள் ஆம்னி பஸ்கள் இயக்க மீண்டும் தடை விதிக்கப்படுவது தான் தீர்வு என்பது போக்குவரத்து ஆர்வலர்களின் எச்சரிக்கையாகும். இதற்கு நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நீடிக்கும் தடையை நீக்க மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையர் இணைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அன்றாடம் 795 பஸ்கள்

சென்னை, பெங்களூரு உள்பட நீண்ட தூரங்களுக்கு மதுரை நகரில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை 795 என்பது 2015ம் ஆண்டு கணக்கீடாகும், இதன் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

Related Stories: