புயல் எச்சரிக்கை எதிரொலி நாகை, புதுகை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: கடல் அமைதியாக இருப்பதால் பீதி

வேதாரண்யம்: புயல் எச்சரிக்கை காரணமாக நாகை, புதுக்கோட்டை மாவட்ட பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 22,000 பேர் இன்று கடலுக்கு செல்லவில்லை. வழக்கத்தை விட கடல் அமைதியாக இருப்பதால், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கை அருகே தென்கிழக்கு வங்கக் கடல்  பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  27, 28ம் தேதிகளில் புயலாக வலுப்பெறும். பின்னர் அந்த புயல் தீவிரப் புயலாக மாறி 30ம் தேதி  சென்னை-ஆந்திரா இடையே  கரையைக் கடக்கும். எனவே, தமிழக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மீன்பிடி தடை காலம் காரணமாக கடந்த 15ம் தேதி முதல் தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. குறைந்த தூரம் சென்று மீன்பிடிக்கும் பைபர் படகுகள், நாட்டுப்படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர்.

நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கொள்ளிடம் உள்பட 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 5,000 பைபர் படகுகள் உள்ளன. புயல் எச்சரிக்கை காரணமாக இந்த படகுகளில் கடலுக்கு செல்லும் சுமார் 20,000 மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் பைபர் படகுகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஆங்கரை வரை 32 மீனவ கிராமங்களில் சுமார் 2000 நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் ஓய்வில் உள்ளனர். அதே சமயம் தஞ்சை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வழக்கம் போல் கடலுக்கு சென்றுள்ளனர். தஞ்சை மாவட்டம், நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடல் இன்று அமைதியாக காணப்படுகிறது. வழக்கமான அலைகளின் சீற்றம் கூட இல்லை. இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், ‘‘நாகை, அதிராம்பட்டினத்தில் நேற்று கடல் அலைகள் லேசான சீற்றத்தில் இருந்தன. இன்று நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. கடல் குளம் போல் அமைதியாக உள்ளது. வழக்கமாக எழும் அலைகள் கூட இல்லை. அலைகளின் வேகம் மிக குறைந்த அளவிலேயே உள்ளது. இதுபோன்று கடல் அமைதியாக இருந்தால், ஆபத்து இருக்கிறது என்று அர்த்தம். எனவே 30ம் தேதி வர இருக்கும் புயலால் பெரும் பாதிப்பு ஏற்படலாம். எனவே அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: