குமரியில் 3வது நாளாக கடல் சீற்றம்; 40 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: குடும்பத்துடன் மக்கள் வெளியேறினர்

நாகர்கோவில்: குமரியில் இன்று 3வது நாளாக கடல் சீற்றம் உள்ளது. பல பகுதிகளில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளனர். சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.தென் மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் மற்றும் பலத்த மழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கடலோர பகுதிகளில் மழையும் நீடித்து வருகிறது. குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் காணப்பட்டது. இதன் காரணமாக வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து மீனவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். குளச்சல், அழிக்கால், தேங்காப்பட்டணம், மேல்  மிடாலம், மிடாலம், இரவிபுத்தன்துறை மற்றும் நீரோடி உள்பட தூத்தூர் மண்டல பகுதிகளில் அதிகளவில் கடல் சீற்றம் உள்ளது.  இதன் காரணமாக 100க்கணக்கான வீடுகளில் வசிக்கின்ற மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அழிக்கால் பகுதியில் கடல் நீர் உட்புகுந்து கால்வாய்களில் நிரம்பியுள்ளதால் அந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் இன்று 3வது நாளாக அழிக்கால் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது.

இதே போல் குமரி மேற்கு மாவட்ட கடலோர கிராமங்களிலும் இன்று 3வது நாளாக கடல் சீற்றம் காணப் பட்டது. கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகில், 40 ஆயிரம் மீனவர்கள் வரை கடலுக்கு செல்லாததால், படகுகள் அனைத்தும் கரையில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு கடற்கரை கிராமங்களில் மணல் மூட்டைகள் அடுக்கியும், ஜேசிபி உதவியுடன் கால்வாயில் இருந்து தண்ணீரை கடலுக்குள் திருப்பி விட்டும் மீனவர்கள்  முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் கால்வாய் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதன்வழியாக கடல் நீர் உட்புக தொடங்கியதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் அந்தோணியார் தெருவில் உள்ள சிலுவை தாசன் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. ஏற்கனவே வீட்டில் இருந்து ஓடுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

இந்த பகுதியில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் முற்றிலும் பெயர்ந்து போயுள்ளன. இதனால் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. மண்டைக்காடு புதூர் மேற்கு பகுதியில் உள்ள தென்னந்தோப்புகள் மணல் அரிக்கப்பட்டு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. குறும்பனை, கடற்கரை பகுதியில் உள்ள கடலரிப்பால் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. மணல் மூடைகள் அமைத்து வீடுகளை பாதுகாத்து வருகின்றனர். இதற்கிடையே மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடலில் இருந்து இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் நிலை உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறை அறிவித்திருந்தது. இது தொடர்பாக இந்திய கடல் தகவல் சேவை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒன்றரை முதல் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு கடலோர பகுதிகளில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏப்ரல் 26ம் தேதி மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், 27ம் தேதி 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: