ஐபிஎல் டி20 போட்டி: மும்பைக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு

சென்னை: சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை இண்டியன்ஸ் அணி களமிறங்க உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 11 போட்டிகளில் ஆடி, அவற்றில் 8 வெற்றிகளை பெற்று, 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி, அவற்றில் 6 வெற்றிகளை பெற்று, 12 புள்ளிகளுடன் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மும்பையில் நடந்த போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அப்போட்டியில் 8 பந்துகளில் 25 ரன்களை விளாசிய ஹர்திக் பாண்டியா, பின்னர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்தார். இன்றைய போட்டி சென்னையில் நடைபெறுவதால், மும்பை தோல்விக்கு சென்னை அணி பதிலடி தரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வரும் சென்னை அணி, கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் இன்று களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் இறங்குவதால், மும்பை அணியின் வீரர்கள் புத்துணர்ச்சியுடன் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது