இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு: குற்றச்சாட்டின் பேரில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது

கொழும்பு: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரரை ராணுவம் கைது செய்துள்ளது. இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர்  பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஹோட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து  உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய 9 பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

குண்டுவெடிப்பை தொடர்ந்து இதுவரை 75 பேர் வரை இலங்கை ராணுவம் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கொழும்பு நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த  நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது என அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கைது செய்யப்படவில்லை என ரிஷாத் மறுப்பும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்:

தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி அங்குள்ள சிறுபான்மை இனத்தவரிடையே நிலவுகிறது. இந்நிலையில் இன்று  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன்  தொடர்புடைய 140க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். தற்போது 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.  எங்கள் மண்ணில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின்  நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்தும் திறன் அரசுக்கு உண்டு என குறிப்பிட்டார். மேலும் இலங்கையில் சிறுபான்மை இனத்தவராக வாழும் முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகள் போல் பார்க்காமல்,  அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: