வறண்டு கிடக்கும் ஏரியை தூர்வார அதிகாரிகள் மறுத்ததால் ஏரியிடம் மனு அளித்த விவசாயிகள்

அரியலூர் : வறண்டு கிடக்கும் ஏரியை தூர்வார அதிகாரிகள் மறுத்ததால் ஏரியிடம் நூதன முறையில் விவசாயிகள் மனு அளித்தனர். மேலும் மழை பெய்ய வேண்டி வழிபாடு நடத்தினர். அரியலூர் தாலுகா திருமானூர் ஒன்றியத்தில் கோவிலூர் மற்றும் காமரசவல்லி கிராமத்தில் உள்ள 1300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுக்கிரன் ஏரி உள்ளது. சோழர் காலத்தில் வெட்டப்பட்டு ஏரியை சுற்றி 18 கிராமங்களுக்கு 5,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. இந்த சுக்கிரன் ஏரிக்கு காவிரி ஆற்றில் முக்கொம்பில் இருந்து பிரிந்து வரும் புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கடைசியாக 27வது ஏரியாக இந்த சுக்கிரன் ஏரியில் நீர் வந்து அங்கிருந்து 18 கிராமங்களில் உள்ள 5,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

1,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 1,060 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு அதிலிருந்து பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் இந்த ஏரி முழுவதும் இதுவரை எப்போதுமே வண்டல் மண் வெட்டி எடுத்து ஆழப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் மழைகளில் மூலம் அடித்து வரப்படும் வண்டல் மண்கள் சேர்ந்து ஏரி முழுவதும் தூர்ந்து போய் உள்ளது.

கடந்தாண்டு காவிரியிலும், கொள்ளிடத்திலும் லட்சக்கணக்கான கனஅடி நீர் வந்தும் நீரை சேமிக்க முடியாமல் கடலில் போய் கலந்தது. ஆனால் காவிரியிலிருந்து புள்ளம்பாடி வழியாக இணைப்புகள் கொண்ட இந்த 1,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுக்கிரன் ஏரியில் முழுவதும் அந்த நீர் தேக்கப்படவில்லை. 2 அடி நீர் தேக்கினாலே அதற்குமேல் வரும் நீர் வழிந்து கொள்ளிடத்தில் சென்று கலந்து விடும் என்ற நிலை உள்ளது. தற்போது சுக்கிரன் ஏரியில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை.

ஏரிகளில் விவசாயிகள் மண்ணை வெட்டி எடுத்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் அரியலூர் தாலுகாவில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஒரு நாள் அல்லது  இரண்டு நாள் விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்த உடனேயே அதிகாரிகள் வந்து தடுத்து விட்டனர். அரியலூர் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளிலும் அதிகாரிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கவில்லை. சுக்கிரன் ஏரியை வெட்டுவதற்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டபோது அனுமதி தர மறுத்து விட்டனர். இதனால் அரியலூர் தாலுகாவில் உள்ள சுக்கிரன் ஏரி உட்பட குளம், குட்டைகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால் அருகே உள்ள ஆழ்குழாய் கிணறுகள் வேலை செய்யவில்லை. கால்நடைகளுக்கு குடிக்க ஏரிகளில் நீர் இல்லை. பறவைகள் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. எனவே சுக்கிரன் ஏரியை தூர்வார அனுமதிக்க வேண்டுமென அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தும் ஏற்கவில்லை. இதனால் சுக்கிரன் ஏரியில் நடுவில் பூஜை செய்து ஏரியிடம் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். மேலும் மழை வேண்டி வழிபாடு செய்தனர். அப்போது பேசிய விவசாயிகள் மருதை ஆற்றில் தடுப்பணை அமைத்து 3 கிலோமீட்டர் வாய்க்கால் அமைத்து சுக்கிரன் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால் சுக்கிரன் ஏரியும் அதை சுற்றியுள்ள பல ஏரிகளும் நிரம்புமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக ஏரிகளில் இருந்து மண் வெட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி அளித்து ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: