வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்..: தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியில் வரும் 30ம் தேதி நெருங்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வங்கக்கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வரும் 28ம் தேதிக்குள் கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பாலச்சந்திரன் பேட்டி

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து புயலாகவும் மாறக்கூடும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 1500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் ஏப்ரல் 30ம் தேதியன்று வடதமிழக கடற்கரைக்கு அருகில் வரக்கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் இன்றும் நாளையும்(26, 27) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம். மேலும், ஏப்ரல் 30ம் தேதியன்று வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. எனினும் புயல் நகர்வதை பொறுத்தும் கனமழைக்கான வாய்ப்பில் மாற்றங்கள் நிகழக்கூடும். இந்திய வானிலை மையமானது ரெட் அலர்ட் ஏதும் விடவில்லை. அதுமட்டுமல்லாது, ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்படுவதில்லை. கனமழைக்கான வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு பகுதி சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும் என்றும் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

டிஜிபி உத்தரவு

மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை ஏப்ரல் 30ம் தேதி ஃபானி புயல் தாக்கும் என்பதால் பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல் படையினர் மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: