×

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலையின் முடிவிற்கு...தமிழக அரசு தடை விதித்து உத்தரவு

சென்னை: பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. மாணவர்கள் சேர்க்கை, தேர்வுகள் உள்ளிட்டவற்றை பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த நிலையில், இந்தாண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்ததால், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மாணவர்கள் சேர்க்கையை நடத்த உள்ளது. மேலும், எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், தமிழக உயர்கல்வித்துறைக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கு வரும் கல்வியாண்டில்(2019-2020) கட்டணம் உயர்த்தப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். இந்த முடிவுக்கு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாகவும், மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு கட்டண உயர்வு இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன்படி, செமஸ்டருக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு, இந்த முடிவானது அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு இருக்காது என உயர்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anna University , Engineering fees, Anna University, Tamilnadu Government, Surappa
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...