வைர வியாபாரி நீரவ் மோடிக்கு மே 24ம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிப்பு : இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன் : வைர வியாபாரி நீரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் மே 24ம் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்துள்ளது. பிரபல தொழிலதிபர்கள் நிரவ்மோடி, மொகுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 ஆயிரத்து 570 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து நிரவ்மோடி, மெகுல் சோக்சி இருவரின் நவீன பங்களாக்கள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களது அசையும், அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதனிடையே வெளிநாடு தப்பிச்சென்ற நீரவ் மோடி இங்கிலாந்தில் மாறு வேடத்தில் சுற்று திரிவதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து நீரவ் மோடியை நாடு கடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி தர உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவின்படி அவர் கைது செய்யப்பட்டு 28 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் முடியவுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது.

அப்போது காணொலிக்காட்சி வாயிலாக நீரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய இங்கிலாந்து நீதிமன்றம், மே 24ம் தேதி வரை போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் கோரி ஏற்கனவே நீரவ் மோடி தாக்கல் செய்த 2 மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிரவ்மோடி வைத்திருந்த 13 கார்களை ஏலம் விட  விட்டு, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வங்கிகளுக்கு வழங்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து 13 கார்களின் புகைப்படங்கள் மற்றும் காரின் தொடக்க விலைகள், கார்களின் எண்கள் உள்ளிட்டவை மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: