தாமிரபரணியில் புது பாலத்துக்கு நெல்லையில் இணைபாலம் கட்டும்பணி தொடக்கம்

* மின்கம்பங்களை அகற்றிய பின் சாலை விரிவாக்கம்

நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றில் கட்டப்படும் புதிய ஆற்றுப்பாலம் அருகே சாலை விரிவாக்கப்பணி மின்கம்பங்கள் அகற்றப்படாததால் பாதிப்படைந்துள்ளது. இதனிடையே பலாப்பழ ஓடை பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் தற்போது உள்ள சுலோச்சனா முதலியார் பாலம் அருகே மற்றொரு பெரிய பாலம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி இத்திட்டத்திற்கு ரூ.18 கோடி மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் கடந்த (2018) ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கின.

 இந்த புதிய பாலம் தற்போதுள்ள எம்ஜிஆர் சிலை பின்புறம் அருகே கரைப்பகுதியில் தொடங்கி எதிர்பகுதியில் தேவர் சிலை அருகே இணையும் வகையில் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள பாலம் போலவே அகலமாக அமைக்கப்படுகிறது. 237 மீட்டர் நீளமும் 14.8 மீட்டர் அகலமும் இருக்கும். இதில் 10.5 மீட்டர் அகலத்திற்கு வாகனங்கள் செல்லவும் மீதி உள்ள அளவில் இரு பகுதியும் பாதசாரிகள் செல்ல நடைபாதையும் அமைக்கப்படுகிறது. பாலத்தை மொத்தம் 10 தூண்கள் தாங்கும்  வகையில் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தூணுக்கும் ஆற்றின் பூமிக்கு கீழ் பகுதியில் பாறை எட்டும் வரை 4 இணைப்பு கான்கிரீட் குழாய் தூண்கள் அமைத்து அதன்மேல் டெக் கட்டப்பட்டுள்ளன. தற்போது பாலத்தின் மையபகுதியை இணைக்கும் இரண்டு டெக்கிற்காக மெகா தூண்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

வண்ணார்பேட்டை காங்கிரஸ் அலுவலகம் அருகே தற்போது உள்ள, ‘பிள்ளையை போட்டு  பலாப்பழம் எடுத்த’ ஓடைப்பாலம் போல் மற்றொரு பாலம் கட்டும் பணியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக இப்பகுதியில் சென்ற குடிநீர் குழாய் உள்ளிட்ட கேபிள்கள் இடம் மாற்றி வைக்கப்பட்டது.  இந்த சிறிய பாலம் பணிரெண்டரை மீட்டர் அகலத்தில் இருக்கும். ஏற்கனவே தற்போது உள்ள சிறியபாலம் 10 மீட்டர் அகலத்தில் இருப்பதால் மொத்த அகலம் இருபத்தி இரண்டரை மீட்டர் அளவிற்கு அகலப்படும்.

அறிவியல் மையம் முன்பகுதியிலும் சர்வீஸ் சாலை வரும் வகையில் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலையும் 22 மீட்டர் அகலமாக்கப்படும். இந்தப்பணியை தொடங்க தயாராக இருந்தாலும் இங்கு அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் உள்ளன. இவற்றை அகற்றி இடம் மாற்றி வைக்கவேண்டும் என பாலம் கட்டுமானத்தினர் தரப்பில் மின்வாரியத்திற்கு பணம் கட்டப்பட்டு விட்டதாகவும் அவர்கள் மின்கம்பத்தை அகற்ற காலதாமதப்படுத்துவதால் இப்பணியை தொடங்க முடியவில்லை என தெரிகிறது.

 குறைந்த பட்சம் அவர்கள் மின்கம்பத்தை நடவுள்ள மாற்ற இடத்தை குறித்து கொடுத்தால் அப்பகுதியில் மண் உயர்த்தி கம்பம் நடுவதற்கான வழி செய்துகொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும், இதுவரை 70 சதவீத மொத்தப்பணிகள் முடிந்துள்ளன. மழை குறுக்கீடு இல்லையென்றால் அனைத்துப் பணிகளையும் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

அகற்ற நடவடிக்கை

பாலம் பணி தொடர்பாக மின்வாரிய வட்டாரத்தினர் கூறுகையில், கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு அந்த மின்பாதையை அங்குள்ள இடவசதிக்கு ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அறிவியல் மையம் ஒட்டி உள்ள பஸ்நிறுத்தத்தின் பின்பகுதியில் சாலையை உயர்த்துவதற்காக பெரிய பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.

இதனை நிரப்பி குறைந்த பட்சம் மெட்டல் சாலையாகவாவது உயர்த்தினால்தான் மின்கம்பங்களை அப்பகுதியில் மாற்றி வைக்கமுடியும். இப்போது பள்ளமாக இருப்பதால் அதனை மாற்றுவது சாத்தியமில்லை. எனவே அவர்கள் சாலை மட்டத்தை உயர்த்தியதும் உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைக்க தயாராக இருக்கிறோம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: