×

பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக 66 பேர் தொடர்ந்த வழக்கு: தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிலைக்கடத்தல் வழக்குகள் குறித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், அதற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் சிலைக்கடத்தல் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, ஐஜி பொன் மாணிக்கவேல் தனது பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி, அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் உள்பட 66 பேர், பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தங்களை துன்புறுத்துவதாக காவல் அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்தனர். மேலும் பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் செயல்பட்டு கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் தங்களை ஈடுபட உத்தரவிடுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை எனவும் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnu Mani Naidav ,Supreme Court , Ponmanikkavel, appointment, case dismissed, SC
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...