ஒகேனக்கல் தொங்குபாலம் அருகே கோத்திக்கல் காவிரியில் சுற்றித்திரியும் முதலைகள்

* சுற்றுலா பயணிகள் பீதி

பென்னாகரம் : ஒகேனக்கல் தொங்கு பாலம் அருகே கோத்திக்கல் பகுதி காவிரியில் முதலைகள் சுற்றி வருவதால், சுற்றுலா பயணிகள் பீதி அடைந்துள்ளனர். உயிர்பலி அபாயத்திற்கு முன், முதலைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது, தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

இதனால், ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 1300 கன அடியாக இருந்தது. நேற்று மழை குறைந்த நிலையில், நீர்வரத்து 1000 கன அடியாக சரிந்தது. இந்நிலையில், தொங்குபாலம் அருகே கோத்திக்கல் ஆற்றுப்பகுதியில் நேற்று ஏராளமான முதலைகள், குட்டிகளுடன் ஆற்றில் சுற்றி வருகின்றன. இதை கண்ட சுற்றுலா பயணிகள், அங்கிருந்து அச்சத்துடன் வேறு பகுதிக்கு சென்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் சிலர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘தொங்கு பாலம் அருகே கோத்திக்கல் ஆற்றுப்பகுதியில், நேற்று 10க்கும் மேற்பட்ட முதலைகள் நீந்தியபடி உலா வந்தது. இதை கண்ட நாங்கள், அங்கிருந்து உடனடியாக வேறு பகுதிக்கு சென்று விட்டோம். தற்போது கோத்திக்கல் பகுதியில் பரிசல் ஓட்டிகள், சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து செல்கின்றனர். தற்போது ஆற்றில் சுற்றி வரும் இந்த முதலைகளால், அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றில் சுற்றி வரும் முதலைகள் மற்றும் குட்டிகளை உடனடியாக வனத்துறையினர் பிடித்து முதலை பண்ணையில் அடைக்க வேண்டும்,’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: