கருங்கல்பாளையம் சந்தையில் மாடு விற்பனை சூடுபிடித்தது

* வியாபாரிகள் மகிழ்ச்சி

ஈரோடு : தமிழகத்தில் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததையொட்டி ஈரோடு மாட்டு சந்தையில் வழக்கம்போல் மாடுகள் வரத்துவங்கியதால் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடக்கும். இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர்.   தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி மக்களவை தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டது.

அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரும் பணத்தைபறிமுதல் செய்தனர். குறிப்பாக, ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகளை வாங்க வரும் வெளிமாநில வியாபாரிகளிடம் பல லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனால், வெளிமாநில வியாபாரிகள் மாட்டு சந்தைக்கு வர தயக்கம் காட்டினர்.

ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து, கடந்த 6 வாரமாகவிற்பனை மந்தமாக நடந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தல் கடந்த 18ம் தேதி நிறைவுபெற்றதை தொடர்ந்து,தேர்தல் நடத்தை விதிமுறைகளில் பணம் பறிமுதல் செய்யும் பறக்கும் படையை மட்டும் தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. இதனால், நேற்று நடந்த ஈரோடுகருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்தனர்.

வியாபாரிகளின் வருகைக்கு ஏற்ப மாடுகள் வரத்தும் அதிகரித்ததால் மாடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறுகையில்,` தேர்தல் பறக்கும் படையால் கடந்த 2 மாதமாக வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. மாடுகளும் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

தேர்தல் பறக்கும்படை விலக்கிக்கொள்ளப்பட்டதால் நேற்று நடந்த சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்தனர். சந்தைக்கு பசு மாடு 400, எருமை மாடுகள் 300, கன்றுகள் 200 என 900 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: