மருத்துவ வசதி பெற 12 கி.மீ செல்லும் பழங்குடியின கிராம மக்கள்

* நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து வரும் அவலம்

குன்னூர் : குன்னூர் அருகே பில்லூர் மட்டம் அடுத்துள்ள சின்னாலகோம்பை பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக போதிய மருத்துவசதி, சாலை வசதியின்றி தவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பில்லூர் மட்டம் பகுதியில் இருந்து, சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சின்னாலகோம்பை பழங்குடியினர் கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் இருளர் பழங்குடிகள் ஆவர். இந்த கிராமத்தில்  70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

பழங்குடி மக்கள் மருத்துவசதிக்கு மற்றும் அத்தியாவசிய தேவைக்காக தினந்தோறும் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பில்லூர் மட்டம் பகுதி வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை ஆரம்ப கல்வி பயில கல்லார் மற்றும் பில்லூர் மட்டம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேல்நிலை கல்வி பயிலவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் குன்னூர் வரவேண்டி உள்ளது.

சின்னாலகோம்பை பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதியின் வழியே 6 கிலோமீட்டர் பயணித்து பில்லூர் மட்டம் பகுதிவரை நடைபயணம் மேற்கொண்டு, அங்கிருந்து பேருந்து மூலம் குன்னூர் போன்ற நகர் பகுதிக்கு அப்பழங்குடி மக்கள் வரவேண்டியுள்ளது.  குறிப்பாக நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை 3 கிலோ மீட்டர் வரை ஒற்றையடிபாதை வழியாக தொட்டில் கட்டி சுமந்து வருகின்றனர். கனமழை காரணமாக  கடந்த 20ம் தேதி இந்த கிராமத்தை சேர்ந்த 8 பேருக்கு மின்னல் தாக்கியது.

பாதிக்கப்பட்டவர்களை குன்னூர் மருத்துவமனை கொண்டு வர 17 மணிநேர போராட்டம் நடந்துள்ளது. வன விலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவே தயங்கி வருகின்றனர். மேலும்  வனப்பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி பொது மக்களை விரட்டிவருகிறது.  சின்னாலகோம்பை கிராமத்தில் பல ஆண்டுகளாக பயன்பாடற்று மூடிக்கிடக்கும் மருத்துவமையத்தை உயிர்ப்பித்து, மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் உடனடி கோரிக்கையாகும்.

மேலும்  உரிய நேரத்தில்  மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் உயிர் இழக்கும் சம்பவம் நடந்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சின்னாலகோம்பை கிராம பகுதிக்கு எளிதாக செல்ல வனத்துறையினர் போதிய சாலை வசதி அமைத்து தரவேண்டும், வாகனம் செல்லும் பாதை உள்ள இடங்களில் ஜீப் வசதி அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: