சூலூர் தொகுதியில் போட்டியிட டெபாசிட்டுக்காக 5 ஆயிரம் பேரிடம் ஒரு ரூபாய் வசூலித்த சமூக ஆர்வலர்

சோமனூர் : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட இருக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் தன்னுடைய டெபாசிட் தொகையை கட்டுவதற்கு பொதுமக்களிடம் தலா ஒரு ரூபாய் வீதம் வசூலித்து வருகிறார்.  கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கியது.

வரும் 29ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இந்நிலையில், சூலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட, சோமனூர் அருகேயுள்ள எலச்சிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபாகரன் (29) முடிவெடுத்துள்ளார்.

இவர் அவிநாசி - அத்திக்கடவு போராட்டம், கணியூர் சுங்கச்சாவடி போராட்டம், சோமனூர், சாமளாபுரம் டாஸ்மாக் போராட்டம் என இப்பகுதி சுற்று வட்டாரங்களில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவர். மணல் கொள்ளை விவகாரத்தில் தொடர்ந்து போராடியதால், இவருக்கு மணல் கொள்ளையர்கள் மூலம் ஆபத்து இருப்பதாகக் கூறி ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தற்போது சூலூர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க திட்டமிட்டுள்ள இவர், தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையை கட்டுவதற்கு தேவையான தொகை ரூ.10 ஆயிரத்தை செலுத்த மக்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஒரு ரூபாய் வசூலித்து வருகிறார்.  பிரபாகரன் கூறுகையில், சூலூர் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், ராயர்பாளையம், செகுடந்தாளி, சூலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன்.

அவர்களிடம் தனது வேட்பு மனு டெபாசிட் தொகைக்காக தலா ஒரு ரூபாய் வழங்கும்படி கோரினேன். அவர்கள் மூலம் இதுவரை ரூ.5 ஆயிரம் வசூலாகியுள்ளது. மேலும் ஓரிரு நாளில் ரூ.5 ஆயிரம் பேரிடம் ரூ.5 ஆயிரம் வசூலித்துவிடுவேன். பின்னர் அத்தொகையை கொண்டு டெபாசிட் தொகையை செலுத்தி, வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு ஒரு ரூபாய் கொடுத்துள்ள அனைவரும் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: