வங்கக் கடலில் உருவான புயல் சின்னம்..: முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை

சென்னை: வங்கக் கடலில் புயல் சின்னம் உருவான சூழலில் சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது அடுத்த 4 நாட்களில் புயலாக வலுவடைந்து வட தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஃபனி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அவசர ஆலோசனை இன்று மதியம் 12.15 மணியளவில், தலைமைச் செயலகத்தில் துவங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உட்பட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். புயல் காரணமாக தமிழகத்தின், வட மாவட்டங்களில் பாதிப்பு இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: