பராமரிப்பு பணிகளுக்காக தாமிரபரணி குடிநீர் நிறுத்தம்

அருப்புக்கோட்டை : பராமரிப்பு பணிக்காக தாமிரபரணி குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அருப்புக்கோட்டைக்கு வைகை மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் தினமும் 95 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக தாமிரபரணியிலிருந்து 49.50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.

 ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக 17 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. வைகை குடிநீர் திட்டத்தில் வைகை வற்றியதால் இதன் மூலம் வரவேண்டிய குடிநீர் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் மூலம் 17 லட்சம் லிட்டர் தண்ணீர் வருகிறது.

இதைக்கொண்டு நகர் முழுவதும் குடிநீரை விநியோகம் செய்ய முடியவில்லை. 22 நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சி முறையில் விடப்படுகிறது. இதில் மின்தடை குழாய் பழுது லீக்கேஜ் ஆகிவிட்டால் நாட்கள் கடந்து விடும். இதனால் நகரில் எப்போதும் குடிநீர் தட்டுப்படாக உள்ளது. தற்போது வல்லநாடு பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை குழாய்களில் ஆங்காங்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

கடந்த ஒரு மாத காலமாக பகிர்மான குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக செல்வதால் அருப்புக்கோட்டைக்கு கொடுக்க வேண்டிய குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் நேற்று முதல் மேலக்கரந்தையிலிருந்து வல்லநாடு வரை குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பு மற்றும் லீக்கேஜ்களை சரிசெய்யும் பணியை குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்து வருகின்றனர்.

இதனால் வல்லநாட்டில் குடிநீர் பம்பிங் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வைகை குடிநீர் திட்டம் மூலம் கொண்டுவரப்படும் குடிநீர் குழாய் நான்கு வழிச்சாலையில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் நகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதனால் இந்த குடிநீர் திட்டம் மூலம் வரக்கூடிய தண்ணீரும் நின்றுவிட்டது. தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் லீக்கேஜ்களை உடனுக்குடன் சரிசெய்வது, தனியாக மின் இணைப்பு பெற்றிருந்தும் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

சரியான திட்டமிடல், மின்தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை போன்றவற்றை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுப்பதில் அக்கறை கொள்வதில்லை. சொல்வதை செய்து காட்டக்கூடிய திறனும் அதிகாரிகள் யாருக்கும் இல்லை. இதனால் குடிநீருக்காக குடத்துடன் அலையவேண்டிய நிலையில்தான் அருப்புக்கோட்டை மக்கள் உள்ளனர். எனவே குடிநீர் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் கூறுகையில், ‘தாமிரபரணி குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிமென்ட் குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதில் ஆங்காங்கு உடைப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்யும்போது குடிநீர் பம்பிங் செய்யும் காலம் கூடுகிறது. மேலும் தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கென தனி மின் இணைப்பு பெற்றிருந்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படும்போது பம்பிங் செய்யப்படும் இடங்களிலும் மின்தடை ஏற்பட்டு விடுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய்கள் பராமரிக்கும் பணி நேற்று துவங்கியுள்ளது. பணிகள் முடிவடைந்தவுடன் குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: