உத்தமபாளையத்தில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோர்

* கண்டுகொள்ளாத போலீசார்

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதிகளில் கள்ள சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. போலீசார் இதனை கண்டும் காணாமல் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  உத்தமபாளையம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் உத்தமபாளையம், உ.அம்மாபட்டி, க.புதுப்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. உத்தமபாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகே கடந்த 2 வருடத்திற்கு முன்பு  மதுக்கடை செயல்பட்டபோது  பஸ்ஸ்டாண்ட் முழுவதுமே குடிமகன்களின் கூடாரமாக காணப்பட்டது.  

அரசு டாஸ்மாக் கடை மூடப்பட்ட பின்பும் இப்போதும் குடிமகன்கள் பஸ்ஸ்டாண்டை குடிக்கும் கூடாரமாக மாற்றி வருகின்றனர். இதில்   மகப்பேறு அடைந்த தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக பேரூராட்சி சார்பில் அறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அறையை சுற்றிலும் தற்போதுவரை  குடிமகன்கள் பகலிலேயே ஆக்கிரமித்து குடிக்கின்றனர்.  

இதனால் அவசரத்திற்கு வரக்கூடிய பெண்கள் உரிய இடம் இல்லாமல் தவிக்கும் நிலை தொடர்கிறது. மறுபுறம் பஸ்ஸ்டாண்ட் முழுவதிலும் குடித்து வீசி சென்ற பாட்டில்களே அதிகம் கிடக்கின்றன. குடிமகன்கள் அச்சத்தினால் பாலூட்டும் தாய்மார்கள் அறை பூட்டப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கவேண்டிய காவல்துறை அதிகாரிகள் மவுனம் காப்பதாக புகார் எழுந்துள்ளது.

 இதேபோல் உத்தமபாளையம் போலீஸ் சரக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் மதுபான விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.  இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் உள்ளூரில் இருந்து கள்ளத்தனமாக வாங்கிவந்து விற்பனை செய்யப்படுபவை. எனவே போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பதை தடுக்க வேண்டும். பஸ்ஸ்டாண்ட் பகுதியில் குடிமகன்களின் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘பகலில் குடிமகன்கள் செய்யும் அட்டகாசத்தை போலீசார் கண்டும், காணாமல் உள்ளனர். வெளிமார்க்கெட்டில் இருந்து பஸ்ஸ்டாண்டு, கிராமசாவடி, உ.அம்மாபட்டி விலக்கு மற்றும் க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உ.அம்மாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் மிக தாராளமாக விற்பனை செய்யும் நிலையை கட்டுப்படுத்திட போலீசார் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். உத்தமபாளையம் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் அதிகாலை முதலே மதுபான பாட்டில்கள் மிக தாராளமாக கிடைக்கிறது. இதனை எப்படி கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்ய போலீசார் அனுமதிக்கின்றனர் என்பது புதிராக உள்ளது’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: