வருமானத்தில் பாதி ‘வாட்டருக்கே’ போகிறது

* அம்பாத்துரை இந்திரா காலனி மக்கள் புலம்பல்

செம்பட்டி : அம்பாத்துரை இந்திரா காலனியில் குடிநீர் தட்டுப்பாட்டால் குடம் ரூ.4க்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை ஊராட்சிகுட்பட்டது இந்திரா காலனி. இங்கு சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் விநியோகிக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. தற்போது அவை அனைத்தும் வறட்சியால் தண்ணீர் அதலபாதாளத்திற்கு சென்று செயலற்றுபோய் விட்டது. சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் காட்சிப்பொருளாய் உள்ளன.

இதனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை. ஒரு குடம் தண்ணீர் ரூ.4க்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களே ஆவர். இதனால் தங்களது வருமானத்தில் தினசரி தண்ணீருக்கு மட்டும் ரூ.40 முதல் ரூ.50 வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கிராமமக்கள் புலம்புகின்றனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வருமானத்தில் பாதி தண்ணீருக்கே செலவாகி விடுகிறது. இதனால் உழைத்தும் பயனில்லாமல் போகிறது. எனவே அம்பாத்துரை ஊராட்சி நிர்வாகம் மக்கள் நலன் கருதி புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து கொடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு வழங்க வேண்டிய காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட தண்ணீரை முறையாக வழங்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: