ரோட்டோர கிணறுகளால் தொடர்கதையாகும் விபத்து

திண்டுக்கல் : மாவட்டத்தில் ரோட்டோர கிணறுகளால் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. பலமுறை எச்சரித்தும் தடுப்பு சுவர் கட்டாத நிலத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரோட்டோர கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் ரோட்டில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உயிர் இழப்புகளும் நடந்தது.

இந்த அவலத்தை போக்க ரோட்டோர கிணறுகளை சுற்றி உயரமான தடுப்பு சுவர்கள் கட்டுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. இதையடுத்து பல இடங்களில் உள்ள ரோட்டோர கிணறுகளுக்கு முள் வேலி, தடுப்பு சுவர் கட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் இன்னும் ரோட்டோர கிணறுகளுக்கு தடுப்பு சுவர் கட்டாமல் உள்ளது.

இதனால் அவற்றில் விழுந்து பலியாவதும், படுகாயமடைவதும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக திண்டுக்கல் தோட்டனூத்து அருகேயுள்ள கிணற்றில் பலமுறை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தடுப்பு இல்லாத ரோட்டோர கிணறுகளுக்கு தடுப்பு சுவர் கட்டுவதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: