மக்களவை தேர்தல் 2019: உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி

வாரணாசி: உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தமது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கால பைரவர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவிட்டு தமது வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துள்ளார். பிரதமரின் வேட்புமனுவை காவலாளி ஒருவர், மகளிர் கல்லூரி முதல்வர் ஆகியோர் முன்மொழிந்தனர். வேட்புமனு தாக்கலின்போது, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே, ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதில் அதிமுக சார்பில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்தரநாத் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோரும் பங்கேற்றனர்.

மோடி உரை..

முன்னதாக பாஜக தொண்டர்கள் மத்தியிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறுகையில், தேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் நேர்மையான கூட்டணி அமைத்துள்ளோம். நாட்டுக்காக எவ்வித சூழலிலும் ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். நாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில் ஆட்சி நடைபெறுகிறது. நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

மக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், வாரணாசி தொகுதி மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டதாக தம்மால் கூற முடியாது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், வளர்ச்சித் திட்டங்களும் சரியான திசையில் சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் உண்மையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: