தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் அடுத்தடுத்து 19 மாணவர்கள் தற்கொலை.: தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஐதராபாத்: தெலுங்கானாவில் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் 19 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில், டி.பி.ஐ.இ. எனப்படும் தெலுங்கானா இன்டர்மீடியட் கல்வி வாரியத்தின் சார்பில் இன்டர்மீடியட்(11 மற்றும் 12ம் வகுப்பு) தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 18ம் தேதி வெளியாகியுள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த ஆண்டு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியை தனியார் நிறுவனத்திற்கு முதல்வர் கொடுத்ததே இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தோல்வி விரக்தியால் மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 19 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தேர்ச்சி பெறாத மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தையும் எவ்வித கட்டணமும் இன்றி மறுமதிப்பீடு செய்யவும், இதுகுறித்து முழு விசாரணை நடத்தவும் முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தோல்வியடைந்த மாணவர்கள் மட்டுமின்றி வெற்றி பெற்ற சில மாணவர்களும் மதிப்பெண் குறைவாக இருந்ததால் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 1000க்கு 847 மதிப்பெண்கள் எடுத்தும் தான் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்க்கையில் இன்னும் நிறைய உள்ளது. தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது. வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது. உங்களுக்காக இன்னும் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றது. உங்களுடைய தற்கொலை உங்கள் பெற்றோர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும். எனவே சிந்தித்து செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: