சாதி, மதம், இனம் எனக்கூறி அதிகாரிகளிடையே பிரிவினையை உண்டாக்குகிறது தேர்தல் ஆணையம்: முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டு

திருமலை: சாதி, மதம், இனம் எனக்கூறி தேர்தல் ஆணையம் அதிகாரிகள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குகிறது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான உடன், விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். எனவே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். ஆட்சி  அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சியினர் தேர்தலின்போது  எவ்வளவு முடியுமோ அவ்வளவு வன்முறைகளை மேற்கொண்டனர். இருப்பினும் அவை அனைத்தையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டோம்.

ஜனநாயகத்திற்காக நாம் செய்த போராட்டம் அனைவருக்கும் உதாரணமாக இருக்கும். எத்தனை பேர்  என்ன தெரிவித்தாலும் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது  நாமே. வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து நான் செய்துவரும்  போராட்டம் தற்போது தொடங்கியது அல்ல.  பல ஆண்டுகளாக போராடி  வருகிறேன்.

தெலங்கானா மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வை கூட சரியான முறையில் நடத்த முடியாத நிலையில் அம்மாநில அரசு உள்ளது. இன்டர்மீடியட் தேர்வு குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் ஆய்வு நடத்தினால் யாரும் எந்த  கட்சியும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், ஆந்திராவில் நான் ஆய்வு நடத்தினால் மட்டுமே பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி வருகின்றனர். தற்போது தேர்தல் ஆணையம் சாதி, மதம், இனம் எனக்கூறி அதிகாரிகள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இவை அனைத்தையும் மீண்டும் சாமர்த்தியமாக எதிர்கொள்வோம். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டாலும் அவை அனைத்தையும் எதிர்கொண்டு உரிய பாடம் புகட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: