×

பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டி.யும் ஏழைகள் பணத்தை திருட மோடி கண்டுபிடித்த வழி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜலோர்: ரூபாய் நோட்டுத்தடையும், ஜிஎஸ்டியும் ஏழைகள், சிறுவியாபாரிகளின் பணத்தை திருட மோடி உருவாக்கிய வழிமுறை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி ராஜஸ்தானின் மார்வார் பகுதியில் உள்ள ஜலோரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே இந்தியா என்ற நிலையை ஏற்படுத்துவோம். தொழிலதிபர்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத நிலையில் அவர்கள் பெற்ற கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது. அதேபோல்  விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர், சிறு வர்த்தகர்கள் பெற்ற கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரிவிதிப்பும் ஏழைகள், தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்களின் பணத்தை திருட ஏற்படுத்தப்பட்ட வழிமுறையாகும்.

இதில் பாதிக்கப்பட்ட அவர்கள் நியாய் திட்டத்தால் பலனடைய முடியும். காங்கிரஸ் அரசு மக்களின் `மனதில் குரலை’ கவனித்து அதற்கு ஏற்ப செயல்படும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நல்லநாள் வரும் என்ற குரல் கேட்டது.  அது இப்போது நீக்கப்பட்டு `காவலாளியே திருடன்’ என்ற வாசகத்தை மக்கள் முழங்கி வருகின்றனர்.பிரபல பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி நியாய் திட்டத்தை ஏழைகளுக்காக உருவாக்கியுள்ளோம். இதன் மூலம், 25 கோடி ஏழைகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ₹72,000 பணம் செலுத்தப்படும். இதற்கு வசதியாக அனைத்து ஏழைகளுக்கும் வங்கி கணக்கு ஏற்படுத்தி தந்த மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கில் குறைந்தபட்ச வருவாய் திட்டத் தொகை செலுத்தப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே ஆண்டில் 22 லட்சம் அரசு காலிப்பணியிடம் நிரப்பப்படும். விவசாயிகளுக்கு தனி  பட்ஜெட் அமல்படுத்துவோம். அனைத்து மாநில சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்துவோம். அரசு வேலையிலும் இந்த இடஒதுக்கீடு பின்பற்றப்படும். மெகுல் சோக்‌ஷி, அனில் அம்பானி, லலித்மோடி,  நீரவ் மோடி உள்ளிட்ட 15 பணக்காரர்கள் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத நிலையில் அரசு அவர்களை பாதுகாக்கிறது. அவர்களது ₹5.55 லட்சம் கோடி வங்கி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi , Cash Flow ,GST, money Modi, Rahul Gandhi,charge
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...