பிரதமர் பதவிக்காக அலையும் மாநில தலைவர்களிடம் தீவிரவாத ஒழிப்பு பணியை ஒப்படைக்க முடியுமா?: பிரதமர் மோடி கேள்வி

‘‘பிரதமர் பதவியை அடையும் குறிக்கோளுடன் தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சி தலைவர்களிடம் தீவிரவாத ஒழிப்பு பணியை நம்பி ஒப்படைக்க முடியுமா?,’’ என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். பீகார் மாநிலம், தர்பங்கா நகரில் தேஜ கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் மோடி பேசியதாவது:மக்களவைக்கு நடந்த முதல் 3 கட்ட தேர்தலில், மக்களிடம் தே.ஜ கூட்டணிக்கு ஆதரவு இருப்பது தெரிந்ததும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு நடுக்கம் ஏற்பட்டு விட்டது. அதனால், பாலகோட் தாக்குதலுக்கு  ஆதாரம் கேட்பதை மெகா கலப்பட கூட்டம் தற்போது கைவிட்டு விட்டு, எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூற தொடங்கியுள்ளன.  40, 20 தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் மட்டுமின்றி, கர்நாடகாவில்  வெறும் 8 இடங்களில் போட்டியிடும் கட்சி தலைவர் கூட பிரதமர் பதவி வரிசையில் நிற்கிறார்.  

இது போன்ற நபர்களிடம் தீவிரவாத ஒழிப்பு பணியை நம்பி ஒப்படைக்க முடியுமா? தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டியது அவசியம்.  இதற்கு ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு நிதி தேவை.  உங்கள் காவலாளியால் தனித்து போராட முடியாது. அவருக்கு உங்கள் ஓட்டுகள் தேவை. நீங்கள் இங்கு பா.ஜ வேட்பாளருக்கு ஓட்டு  போட்டாலும் சரி அல்லது வேறு எங்கும் தே.ஜ கூட்டணி வேட்பாளருக்கு ஓட்டு போட்டாலும் சரி, உங்கள் ஓட்டு காவலாளிக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பூஜ்யம்தான் கிடைக்கும்

உத்தரப் பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில்  மோடி பேசுகையில், ‘‘முதல் பாதி பிரசாரத்தில், எதிர்க்கட்சிகள் மோடியை திட்டின. ஆனால், அது பலனளிக்கவில்லை. மீதம் உள்ள பிரசாரத்தில்  அவர்கள் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பற்றி குறை கூறுவார்கள். பூஜ்யத்தை, பூஜ்யத்தால் வகுத்தால், பூஜ்யம்தான் விடையாக கிடைக்கும். அதுபோல், எதிர்க்கட்சிகளுக்கு இந்த தேர்தலில் பூஜ்யம்தான் கிடைக்கும்,’’ என்றார் வாரணாசியில் 6 கி.மீ பேரணிஉத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இதை முன்னிட்டு வாரணாசியில் நேற்று அவர் 6 கி.மீ தூரம் காரில் பேரணி சென்றார். பனாரஸ் இந்து பல்கலைக்  கழகத்தில் இருந்து தொடங்கியது. வழி நெடுகிலும் மக்களை மோடி சந்தித்தார். மத்திய அமைச்சர்கள், பாஜ தலைவர் அமித்ஷா உட்பட மூத்த தலைவர்கள், பேரணியில் கலந்து கொண்டனர். இன்று காலை 11.30 மணிக்கு  வாரணாசி தொகுதியில் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது, அவருடன் தே.ஜ கூட்டணி கட்சி தலைவர்களும் செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: