பாகிஸ்தான் எல்லை கிராமங்களில் சோகம் 100 நாள் திட்டத்தில் வேலை செய்து கால்நடைக்கு தீவனம் வாங்கும் மக்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. முதல் கட்டமாக 13 தொகுதிகளில் ஏப்ரல் 29ம் தேதியும், 2ம் கட்டமாக  மீதமுள்ள 12 தொகுதிகளில் மே 6ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. ராஜஸ்தானின் பார்மர் மக்களவை தொகுதியில் வறட்சிதான் பெரும் பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ளது. இங்கு, முஸ்லிம்கள் அதிகம் வாழும் எல்லையோர கிராமங்களில் தற்போது வறட்சி  நிலவுகிறது. பாண்டஸர் கிராமத்தைச் சேர்ந்த ஹபீப் அலி (70) கூறுகையில், ‘‘நான் வளர்க்கும் கால்நடைகளுக்கு இந்த வறட்சி காலத்தில் தீவனம் எதுவும் இல்லை. அவற்றுக்கு வைக்கோல் உள்ளிட்ட தீவனம் வாங்குவதற்காக  என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்துள்ளேன். எல்லையோரத்தில் உள்ள பல கிராமங்களில் வாழும் விவசாயிகளின் நிலை இதுதான்,’’ என்கிறார்.

மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் மழை இல்லாததால் வறண்டு விட்டன. கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காதது இந்த தொகுதியில் பெரும் தேர்தல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. “ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும்  வேட்பாளர்கள் வருகின்றனர். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், தேர்தல் முடிந்த பின்னர் எட்டிப் பார்ப்பதே இல்லை. அடுத்த தேர்தலின்போதுதான் வருகின்றனர்”  என்கிறார் இன்னொரு விவசாயி.‘கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் தீவனம் வாங்கி போட்டு கால்நடைகளை  காப்பாற்றி வருகிறோம்’ என்கின்றனர் பெரும்பான்மை விவசாயிகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: