அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.92 லட்சம் மோசடி முன்னாள் சபாநாயகர் தம்பியை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை: தனியார் விடுதியில் பரபரப்பு, போலீசார் விசாரணை

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.92 லட்சத்தை ஏமாற்றிய முன்னாள் சபாநாயகரின் தம்பி மற்றும் பணத்தை கேட்க சென்றவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை, ராமதேவன் பட்டியை சேர்ந்த நல்லதம்பி (52). இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி. தற்போது இவர், அமமுக கட்சியில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார்.

இவர், கடந்த 2015ம் ஆண்டு தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த செய்யூர், பாலையூர், விளாங்குடி பகுதியை சேர்ந்த அருணகிரி (35), சேலம், ஆத்தூர், வட சென்னிமலை, எம்.பி நகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (38), அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (38), சேலம், பெரிய ஏரி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, அம்மன் நகர் பகுதியை சேர்ந்த சாமிகண்ணு (46) ஆகிய 5 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.92 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு  ஏமாற்றி வந்துள்ளார்.

இதையடுத்து வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராததால் பாதிக்கப்பட்ட 5 பேர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய நபர் சென்னை, வேப்பேரி, பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்த 5 பேரும் தனியார் விடுதியில் தங்கியுள்ள நல்லதம்பியை முற்றுகையிட்டு, தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனே தர வேண்டும் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து, தன்னை 5 பேர் தாக்க வந்துள்ளதாக வேப்பேரி காவல் நிலையத்தில் நல்லதம்பி புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விடுதியில் தகராறு செய்த 5 பேர் மற்றும் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக கூறிய நபர் அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: