38 மக்களவை, 22 சட்டப்பேரவை தொகுதி தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் முத்தரசன் பேட்டி

சென்னை: 38 மக்களவை, 22 சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று முத்தரசன் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வெற்றியை உறுதிப்படுத்தியதற்காக மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 38 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில் 38 தொகுதிகளில் எங்கள் அணி வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறும். அடுத்து வருகிற 19ம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் நாங்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம். எங்கள் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஈடுபடுவோம். மே 1ம் தேதி முதல் நாங்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.

பொன்பரப்பியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியாதபடி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும். அந்த பகுதி மக்கள் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டுவதற்கான மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். பரிசீலிப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று நம்புகிறோம். நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பல இடங்களில் கோளாறுகள், குளறுபடிகள் நடந்துள்ளது. இவைகளை எல்லாம் மீறி தர்மபுரியில் 8 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடலூரில் ஒரு வாக்குசாவடியிலும் திருவள்ளூரில் ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: