தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை: தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வில் பல குளறுபடிகள் ஏற்பட்டு மாணவர்கள் கல்வி மோசமான பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் பல மாநிலங்களில் தீர்மானிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர்.  நடப்பு ஆண்டில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு 1,45,385 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு மே மாதம் 5ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தற்போது தேர்வு நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள நுழைவுச்சீட்டுகளில் ஏராளமான குளறுபடிகளால் மாணவர்கள் குழம்பிப் போயுள்ளார்கள். அதாவது, பெயர், புகைப்படம், பதிவு எண், தேர்வு எழுதும் மொழி, தேர்வு எழுதும் மையம் போன்ற அனைத்தும் தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் நுழைவுச்சீட்டுகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கு முதன்மைக்கல்வி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து மாணவர்களும் முதன்மைக்கல்வி அலுவலர்களை அணுகுவதும், உரிய திருத்தங்களை மேற்கொள்வதும் தேவையற்ற சிரமத்தையும், மன உளைச்சலையும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அளிப்பதாக உள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தோல்வி அடைவதற்கு வழிவகுக்கும் வகையில் திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் முறையில் தேர்வில் குளறுபடிகளை உண்டாக்கி மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் நோக்கத்துடனேயே நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.

மத்திய அரசு பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வோடு விளையாடுவதை நிறுத்தி தமிழகத்திற்கு நடப்பாண்டில் நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளித்திட வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெற்றிட மாணவர்களும், பெற்றோர்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், அமைப்புகளும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: