22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராவார்: வேல்முருகன் பேட்டி

சென்னை: “22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராவார்” என்று வேல்முருகன் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் வேல்முருகன் அளித்த பேட்டி: நடைபெற இருக்கிற 4 தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆதரவை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து இருக்கிறேன். 1ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் நானும் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராக இருக்கிறேன் என்ற தகவலையும் அவரிடம் தெரிவித்து இருக்கிறேன். 22 தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்க இருக்கிறார் என்ற செய்தியை நாட்டு மக்கள் வழங்குவார்கள் என்ற வாழ்த்துக்களை மு.க.ஸ்டாலினிடம்  தெரிவித்து இருக்கிறேன். பாசிச மதவாத ஆட்சி தூக்கி எறிப்பட வேண்டும். ஊழல், லஞ்சம், லாவண்யம், தேர்தல் ஆணையத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துகின்ற இந்திய, தமிழக அரசுகள் அகற்றப்பட வேண்டும்.

பொன்பரப்பி சம்பவத்தை பொறுத்தவரையில் குற்றம் இழைத்தவர்கள் யாரோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். இரண்டு தரப்பிலும், தாழ்த்தப்பட்டவர்கள் தரப்பிலும் சரி, வன்னியர் தரப்பிலும் சரி. யார் பிரச்னைகளுக்கு காரணமானவர்களோ, அவர்களை காவல்துறை கண்டுபிடித்து சட்டத்தின் முன்  நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். எங்கேயோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதற்காக அப்பாவி தலித் மக்களின் வீடுகளை சேதப்படுத்துவதும்,  அப்பாவி வயதான  பெண்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது.

வன்னியர் தரப்பில் இருந்து யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த வன்னியர்களையே குற்றவாளிகள் கூண்டில் ஏற்றுவது ஏற்புடையது அல்ல. யார் குற்றம் செய்தார்களோ அவர் யார், அவர் பெயர் என்ன, எந்த கட்சியை சார்ந்தவர் என்பதை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பியில் வாழ்கின்ற 4000 பேரையும் குற்றவாளிகளை போல் சித்தரிப்பது  ஏற்புடைய செயல் அல்ல. வன்னியர்கள் அமைதிகாக்க வேண்டும். வன்னிய இளைஞர்கள் அமைதிகாக்க வேண்டும். எங்கேயாவது ஒரு சம்பவம் நடந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவியுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: