டாக்டர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

* ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அப்போலோ கடிதம்

* 2 மணிக்குள் உரிய பதில் அளிக்க நீதிபதி உத்தரவு

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வர இருப்பதால், அப்போலோ டாக்டர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அப்போலோ நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்குள் உரிய பதில் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

 

இதை எதிர்த்து அப்போலோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் கடந்த 10ம் தேதி ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு கோரியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அப்போலோ டாக்டர்கள் ரவிசந்திரன், மீனாட்சி சுந்தரம், சிவஞான சுந்தரம், பாபு மனோகர், சஜன் கர்ணாகர் ஹெக்டே, என்.ராமகிருஷ்ணன், சுந்தர், ராமகோபாலகிருஷ்ணன், மதன்குமார், அருள்செல்வன், மேனேஜர், கேசியர் மோகன் ரெட்டி, டெக்னிசியன் காமேஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அப்போலோ டாக்டர்கள் விசாரணைக்கு நேற்று விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அப்போலோ நிர்வாகம் சார்பில் விசாரணை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு வர இருப்பதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கடிதம் அளித்துள்ளனர். இதையடுத்து விசாரணை ஆணையம் சார்பில் இன்று பிற்பகல் 2 மணிக்குள் விசாரணைக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: