×

பல்லாவரம் பஸ் நிலையத்தில் உடைந்த மேற்கூரையால் பயணிகள் அச்சம் : வெயில், மழையில் தவிப்பு

பல்லாவரம்: பல்லாவரம் பஸ் நிலையத்தின் மேற்கூரை உடைந்துள்ளதால், பயணிகள் அச்சத்துடன் அதை பயன்படுத்துவதுடன், வெயில், மழைக்காலங்களில் அவதிக்குள்ளாகின்றனர். சென்னை நகரின் வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக பல்லாவரம் திகழ்கிறது. ஏராளமான வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு தினசரி வந்து செல்கின்றனர். அத்துடன் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் புகழ்பெற்ற பல்லாவரம் சந்தை நடைபெறுவதால், அன்றைய தினத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் இந்த பஸ் நிலையம் வந்து, பஸ் பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பஸ் நிலையத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து, அதன் கம்பிகள் ஆங்காங்கே நீண்டும், ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் உடைந்து கீழே விழும் நிலையிலும் உள்ளன. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையத்தை அதிகாரிகள் பராமரிப்பதே இல்லை. இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் குடிமகன்களின் பிடியில் பஸ் நிலையம் சிக்கி உள்ளது. பஸ் நிலைய மேற்கூரை உடைந்து பல மாதங்களாகியும் இதுவரை அதிகாரிகள் சீரமைக்காமல் உள்ளனர். இதனால், உடைந்த ஷீட் எப்போது, தலை மீது விழுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். மேலும், வெயில், மழைக்காலங்களில் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, விபத்து ஏற்படும் முன், சேதமடைந்த மேற்கூரையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pallavaram , Pallavaram busstand , broken roof ,passenger fears, rain, rain
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...