காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை : தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ரகுபதி என்பவர், தனக்கு சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளன.  பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். ஒதுக்கீடு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார். உரிய விதிமுறைகளை பின்பற்றியே வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும், சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விதிகளை மீறி வேண்டப்பட்டவர்களுக்கு காவலர் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இது தொடர்பாக இரண்டு வாரங்களில் இணையதளத்தை உருவாக்கி, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் வீடு ஒதுக்கீடு வழங்க வேண்டும். குடியிருப்புகளில்  சட்டவிரோதமாக வசிப்பவர்களை அடையாளம் காணும் வகையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை டிஜிபி அமைக்க வேண்டும். அதிகாரிகள் குழு ஆய்வில் சட்டவிரோதமாக குடியிருப்போர் பற்றி தெரியவந்தால், 60 நாட்களில் குடியிருப்பை காலி செய்ய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்ய மறுத்தால் அவர்களை அப்புறப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக காவலர் குடியிருப்புகளில் வசிப்போருக்கு எதிராக புகார்கள் வந்தால், அவற்றின் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: