வெற்றிக்கு காரணம் டீ வில்லியர்ஸ், ஸ்டோயின்ஸ்

பெங்களூர்: ‘டீ வில்லியர்ஸ், ஸ்டோயின்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றியதுதான் பஞ்சாப் அணியை வெல்ல காரணம்’ என்று பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார். சரிவில்  இருந்து மீண்டுள்ள பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி  நேற்று முன்தினம்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இந்த தொடரில் 2வது முறையாக தோற்கடித்தது.  டீ வில்லியர்சும்,  மார்கஸ் ஸ்டோயின்சும் அதிரடியாக விளையாடினர். அதனால் அந்த அணி 20 ஓவர்  முடிவில் 202 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியின் லோகேஷ்  ராகுல், மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன் ஆகியோர் அதிரடி காட்டியதால்  வெற்றி வசப்படும் போல் தோன்றியது. ஆனால் அடுத்து வந்தவர்கள் சுமாராக  விளையாடியதால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 185 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால்  பெங்களூர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றி  குறித்து பெங்களூர் அணியின் கேப்டன், விராட் கோஹ்லி, ‘ கடைசியாக நாங்கள்  விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று இருக்கிறோம். இது  5க்கு 5என்று  இருக்க வேண்டும். கிரிக்கெட்டை நாங்கள் அனுபவித்து  விளையாடுகிறோம், அதற்கு உதாரணம்தான் இந்தப் போட்டி.  டீ வில்லியர்சும,  ஸ்டோயின்சும்  போட்டியை எங்களுக்கு சாதகமாக மாற்றினர். ஒரு கட்டத்தில்  175  ரன்கள் என்ற நல்ல இலக்கை எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள்  இருவரும் 200 ரன்களை கடக்க வைத்தனர். அவர்கள் விளையாடிய விதம்தா–்ன்  ஆட்டத்தின் போக்கை முடிவு செய்தது. நன்றாக விளையாட வேண்டும் என்பதுதான்  எங்கள் அணியின் இலக்கு. நாங்கள் நன்றாக விளையாடுகிறோம். ஆனால் தொடர்ந்து 6  போட்டிகளில் தோற்றது எங்களை காயப்படுத்தியது.

மொஹாலி  போட்டிக்கு பிறகு எங்களுக்கு கிடைத்த இடைவெளி  எங்கள்  நெருக்கடியை குறைத்தது  இந்தப் போட்டியில் 2 இடது கை வீரர்கள் இருந்தது  ஆட்டத்தின் போக்கை மாற்ற உதவியது.  எங்களிடம் 6, 7 பந்து வீச்சாளர்கள்  இருப்பது நன்றாக பந்து வீசுபவர்களை எளிதில் தேர்வு செய்ய முடிகிறது.  ஸ்டோயின்ஸ் உட்பட  பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்தது’  என்றார். பெங்களூர் அணி  அதிரடியாக ரன் குவித்தாலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின்  4  ஓவர்களை வீசி  15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட்டையும்  கைப்பற்றினார். தோல்வி குறித்து அஸ்வின், ‘ போட்டியை நாங்கள் இழக்க பல  காரணங்கள் இருக்கின்றன. அந்த நெருக்கடிகளின் போது சிறப்பாக  விளையாடினால்தான் டி20 போட்டிகளில் வெல்ல முடியும். அதனால்தான் வெல்ல  வேண்டிய போட்டிகளையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: