வருமான வரி, செல்வ வரி பாக்கி ரூ.16.74 கோடி ஜெயலலிதாவின் சொத்து ரூ.56.41 கோடி: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல்

சென்னை: ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.56.41 கோடி; வருமான வரி பாக்கி, செல்வ வரி பாக்கி ரூ.16.74 கோடி என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதாவின்  பெயரில்  ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை அனுபவிக்கும் வகையில், யார் பெயரிலும் ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை.

சொத்துக்கள் யாருக்கு என்ற நிலையில், இந்த சொத்துக்களை  நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் எனக்கோரி சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சகோதரர் மகனான தீபக், தன்னை நிர்வாகியாக நியமிக்கக் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை புகழேந்தி தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தீபக் தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  தீபத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும், இந்த வழக்குடன் விசாரிக்க அனுமதி அளித்தனர். மேலும், இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்கள் தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் வருமான வரித்துறையின் துணை கமிஷனர் ஜி.ஷோபா சார்பில் துறையின் வக்கீல் ஏ.பி.ஸ்ரீனிவாஸ் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: வருமான வரித்துறையில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள், கடன்கள் ஆகியவை குறித்த கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.  

அதன்படி, சென்னை பார்ஷன் மேனர் கட்டிடத்தில் தரைத்தள கட்டிடம், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நகர் காலனியில் உள்ள வீடுகள், மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள இடம், போயஸ் கார்டன் ஆகியவை ஜெயலலிதாவின் அசையா சொத்துக்களாக உள்ளன. இவை வருமான வரி பாக்கிக்காக வருமான வரித்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர ரூ.1 கோடியே 52 லட்சத்து 57 ஆயிரத்து 673 மதிப்புள்ள நிலமும், ரூ.3 கோடியே 82 லட்சத்து 28 ஆயிரத்து 817 மதிப்புள்ள கட்டிடமும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. வங்கி டெபாசிட் ரூ.10 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 151 உள்ளது (எல்லா வங்கி கணக்குகளையும் சேர்த்து). கையில் இருந்த ரொக்கம் ரூ.15,086. தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம், பாரம்பரிய பொருட்கள், ஓவியங்கள், சிலைகள், கலைப்பொருட்கள், படகுகள், விமானம் ஆகியவை மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம்.

கடந்த 2016 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.16 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரத்து 727 ஆகும். கடந்த 2016-17 கணக்கின்படி ஜெயலலிதாவுக்கு பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. அதாவது, கோடநாடு எஸ்டேட்டில் உள்ள 50 சதவீத பங்கின் மூலம் லாபமாக ரூ.1 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 130ம், ராயல் வேலி புளோரிடெக் நிறுவனத்தில் உள்ள 50 சதவீத பங்கு மூலம் கிடைத்த லாபத்தொகை ரூ.1 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 586ம் கிடைத்துள்ளது.

ஜெயா பப்ளிகேஷனின் உள்ள 50 சதவீத பங்கு மூலம் ரூ. 7 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 593 லாபமும் கிடைத்துள்ளது. கிரீன் டீ எஸ்டேட்டில் உள்ள 77 சதவீத பங்கு மூலம் ரூ.12 கோடியே 70 லட்சத்து 40 ஆயிரத்து 128 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பங்குகள் மூலம் நஷ்டம் கழித்து மொத்தம் லாபமாக ரூ.7 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 591 கிடைத்துள்ளது.

இந்த நிறுவனங்களின் பங்குகள் மூலம் கோடநாடு எஸ்டேட் மீது மூலதன இருப்பு ரூ.13 கோடியே 85 லட்சத்து 57 ஆயிரத்து 763 உள்பட ரூ.40 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 064 மூலதன இருப்பு உள்ளது. நிறுவனங்களின் பங்குகளில் உள்ள மூலதன இருப்பு மற்றும் அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு என மொத்தம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.56 கோடியே 41 லட்சத்து 19 ஆயிரத்து 971 என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 1990-91 முதல் 2011-2012 ஆண்டுகளுக்கான ஜெயலலிதாவின் செல்வ வரி (வட்டியுடன் சேர்த்து) 2018 டிசம்பர் 31 வரை ரூ.10 கோடியே 12 லட்சத்து ஆயிரத்து 404 பாக்கி உள்ளது. இதேபோல் வருமான வரி பாக்கி 2019-18 டிசம்பர் 31 வரை ரூ.6 கோடியே 62 லட்சத்து 97,720 பாக்கி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: