×

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆட்டிப்படைக்க பெரும் சதி உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

* 4 ஆண்டாக நீதித்துறை செயல்பாடு வேதனை
* நெருப்போடு இனியும் விளையாட வேண்டாம்
* தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணையில் நீதிபதிகள் கொந்தளிப்பு

புதுடெல்லி: ‘நீதித்துறையை ஆட்டிப்படைக்க அதிகாரத்தில் உள்ளவர்களும், பணக்கார வர்க்கத்தினரும் பெரும் சதி செய்கின்றனர்.  நெருப்புடன் இனியும் விளையாட வேண்டாம் என அவர்களுக்கு சொல்வதற்கான நேரம் வந்து விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நீதித்துறை செயல்படும் விதம் மிகவும் வேதனை அளிக்கிறது,’ என, தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கொந்தளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இது பற்றி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தானாக முன் வந்து விசாரித்தது. அப்போது, இந்த குற்றச்சாட்டில் தன்னை சிக்கவைக்க மிகப்பெரிய அளவில் சதி நடப்பதாக கோகாய் குற்றம் சாட்டினார். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் தலைமை நீதிபதி கோகாய் இடம் பெற்றுள்ள அமர்வே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன் மற்றும் தீபக் குப்தா தலைமையிலான அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பரபரப்பான ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில், ‘உச்ச நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 3 ஊழியர்கள், தொழிலதிபர்கள் சிலருடன் கூட்டு சேர்ந்து தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்த சதி செய்கிறார்கள். அவர்கள் தலைமை நீதிபதியை ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கிற்காக தன்னிடம் ரூ.1.5 கோடி பேரம் பேசப்பட்டது’ என அவர் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் உட்பட சில ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்னிலையில், அவரிடம் நீதிபதிகள் சில விளக்கங்களை கேட்டனர். இதைத் தொடர்–்ந்து, சிபிஐ, மத்திய உளவுத்துறை இயக்குனர்கள் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோரை வரவழைத்த நீதிபதிகள், இது குறித்து ஆலோசனை நடத்தினர்.  

இந்த வழக்கு விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான சதி குற்றச்சாட்டு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரணை நடத்தும். பெயின்ஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் நீதிபதி பட்நாயக் குழுவுக்கு மாற்றப்படும். விசாரணைக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் பெயின்ஸ் வழங்க வேண்டும்.

தனிப்பட்ட உரிமை என கூறி எதையும் மறைக்கக் கூடாது. நீதிபதி பட்நாயக்குக்கு  சிபிஐ, மத்திய உளவுத்துறை இயக்குனர்கள் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து நீதிபதி பட்நாயக் விசாரிக்க மாட்டார். அது குறித்து உச்ச நீதிமன்ற குழு தனியாக விசாரிக்கும். நீதிபதி பட்நாயக் தனது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளாகவே நீதித்துறை செயல்படும் விதம் மிகவும் வேதனை அளிக்கிறது. மற்றவர்களால் பிளாக் மெயில் செய்யப்படும் நிலைக்கு நீதிபதிகள் ஆளாகியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், நாம் நீடிக்க முடியாது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என பணக்காரர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அவர்கள் உச்ச நீதிமன்றத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆட்டிப்படைக்கலாம் என நினைக்கிறார்களா? இது முடிவுக்கு வர வேண்டும்.  மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும். நான்கு முதல் ஐந்து சதவீதம் பேர் உச்ச நீதிமன்றத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர். நீதிபதிகள் என்ற வகையில், இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். நீதிபதிகள் மிகவும் கோபத்துடன் தெரிவித்த இந்த கருத்துகள், நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதிபதி ரமணா திடீர் விலகல்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் சமத்திய பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவின் முன்பாக, குற்றச்சாட்டு கூறிய பெண் ஊழியர் இன்று ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த குழுவில் நீதிபதி ரமணா இடம் பெறுவதற்கு அந்த பெண் ஊழியர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வீட்டுக்கு நீதிபதி ரமணா அடிக்கடி வந்து செல்வார். கோகாய்க்கு  நெருங்கிய நண்பர். அதனால், அவர் இந்த விசாரணைக் குழுவில் இடம் பெறக்கூடாது.

மேலும், விசாகா குழு அறிக்கையின்படி, வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில், பெரும்பான்மை உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டார். இதையடுத்து, இந்த விசாரணைக் குழுவில் இருந்து விலகுவதாக நீதிபதி ரமணா நேற்று அறிவித்தார். இவருக்கு பதில் இந்த குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா நியமிக்கப்பட்டார்.

சதி செய்யும் 3 ஊழியர்கள்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உத்சவ் சிங் பெயின்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தலைமை நீதிபதிக்கு எதிராக தொழிலதிபர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபடுவதாக உச்ச நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 3 ஊழியர்கள் மீது குற்றம்சாட்டி உள்ளார். அவர்களில் 2 பேரின் பெயர்கள், தபன் குமார் சக்ரவர்த்தி, மானவ் குமார் என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் உதவி பதிவாளர்களாக பணியாற்றிவர்கள்.

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அனில் அம்பானியை கடந்த ஜனவரி 7ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இவர்கள் அந்த உத்தரவை மாற்றி, ‘விசாரணைக்கு அனில் அம்பானி நேரில் ஆஜராக தேவையில்லை’ என  இணையதளத்தில் பதிவிட்டனர். இதனால், இவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்த சதியில் சம்பந்தப்பட்டுள்ள 3வது நபர் ஒரு பெண் என குறிப்பிட்டுள்ள பெயின்ஸ், அவரின் பெயரை குறிப்பிடவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court , Power, people, great conspiracy, Supreme Court, alert
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...