திருப்போரூரில் பட்டப்பகலில் பரபரப்பு கடைக்குள் புகுந்து பெண் கொலை: நகைக்காக நடந்ததா என விசாரணை

சென்னை: திருப்போரூரில் பட்டப்பகலில் கடைக்குள் பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவை சேர்ந்தவர்  சுப்பிரமணி (47). இவரது மனைவி சத்யா (44). திருப்போரூர்  சன்னதி தெருவில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருகின்றனர். நேற்று காலை தம்பதி இருவரும் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். காலை 10.30 மணியளவில் சுப்பிரமணி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். சுமார் அரைமணி நேரம் கழித்து அவர், கடைக்கு திரும்பினார். அப்போது, கடையின் உள்ளே மனைவி சத்யா, தலையில் காயங்களுடன்  ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு, மற்றக் கடைக்காரர்கள், பொதுமக்கள் ஓடிவந்தனர். உடனடியாக சத்யாவை  மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்,  ஏற்கனவே சத்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பாராஜு,  திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். சத்யாவின் தலையில் 2 இடங்களில்  வெட்டுக்காயம் இருந்தது. அவர்  கழுத்தில் அணிந்திருந்த 2 தங்க  செயின்களில் 10 சவரன் கொண்ட ஒரு செயின் மட்டும் காணாமல் போனது தெரிந்தது.தொடர்ந்து, சத்யா கொலை செய்யப்பட்ட கடைக்கு சென்று, ஆய்வு செய்தனர். அப்போது, கடைக்கு பொருட்கள் வாங்க வருவது போல் நடித்து, மர்ம நபர்கள் அவரிடம் கொள்ளையடிக்க முயன்று இருக்கலாம். அவர்களுடன் சத்யா போராடும்போது கொலை செய்யப்பட்டாரா என்றும், கடையில் உயரத்தில்  பொருட்களை எடுக்கும்போது தவறி விழுந்து  இறந்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து  மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. சத்யாவின் சடலத்தை  கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

உடல் எடை குறைக்கும் மருந்து காரணமா?

கடையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சத்யா தனது உடல் எடையை சில நவீன மருந்துகளை பயன்படுத்தி குறைத்துள்ளார். மற்ற சிலருக்கும் இந்த மருந்துகளை பயன்படுத்த  பரிந்துரைத்துள்ளார். இந்த மருந்துகளை  பயன்படுத்துவதில் பக்க விளைவுகள்  ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, அந்த மருந்துகளை  சத்யா பயன்படுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு, அவரது ரத்தத்தின்  சிவப்பணுக்கள் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டுள்ளது. கடையில்  உயரே இருந்த பொருட்களை எடுக்கும்போது மயக்கம்  ஏற்பட்டு, விழுந்ததில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. அதே  நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 தங்க செயின்களில், ஒன்றை  காணவில்லை. எனவே, செயின் பறிப்பு கொள்ளையர்கள் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற ரீதியிலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: