ஜூன் 1ம் தேதி முதல் அமல் கேரளாவில் ஓடும் ஆம்னி பஸ்களுக்கு ஜி.பி.எஸ். கருவி

திருவனந்தபுரம்: சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க கேரளாவில் ஓடும் ஆம்னி பஸ்களில் ஜூன் 1ம் தேதி முதல் ஜி.பி.எஸ். கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள போக்குவரத்து துறை அதிகாரி சசீந்திரன்  கூறினார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்கள்  இயக்கப்படுகின்றன. சீசன் சமயங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது, வரி ஏய்ப்பு, பயணிகளிடம் முறைகேடாக நடந்து கொள்வது என இந்த ஆம்னி பஸ்களுக்கு எதிராக பல்வேறு புகார்கள் அடிக்கடி கூறப்பட்டு  வருகின்றன.ஆனால் அரசோ, அரசு அதிகாரிகளோ அதைப்பற்றி கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்ற ஒரு ஆம்னி பஸ் வழியில்  பழுதானது. ஆனால் ஊழியர்கள் மாற்று பஸ்சுக்கு ஏற்பாடு செய்யவில்லை. இதையடுத்து பயணிகள் போலீசில் புகார் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பஸ் ஊழியர்கள் பயணிகளை சரமாரியாக தாக்கினர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை பஸ்சிலிருந்த ஒரு பயணி தனது செல்போனில் படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிட்டார்.  இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகு அந்த குறிப்பிட்ட ஆம்னி பஸ் ஊழியர்கள் தங்களிடமும் பலமுறை அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறி ஏராளமானோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து  7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஆம்னி பஸ் நிர்வாகத்தின் அலுவலகங்களில் போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு முறைகேடுகள்  கண்டுபிடிக்கப்பட்டன.இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் ஓடும் ஆம்னி பஸ்களில் வேகக்கட்டுப்பாடு கருவிகள் பொருத்தாத மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் இந்த ஆம்னி  பஸ்களுக்கு கட்டணத்தை வரையறுப்பது குறித்து  ஆலோசிக்க ஒரு கமிட்டி நியமிக்கப்படும். இந்த கமிட்டி அளிக்கும் அறிக்கையின் படி கட்டணம் நிர்ணயிக்கப்படும். ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து பஸ்களிலும் ஜி.பி.எஸ்.  கருவிகள் கட்டாயமாக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: